தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 13 மற்றும் 14 வயதானவர்களும் இவர்களில் உள்ளனர் என தென்னாபிரிக்காவின் பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி தெரிவித்துள்ளார்.
இம்மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இறந்தவர்களின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி இது தொடர்பாக கூறுகையில்,
‘சன நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் நாம் எண்ணினோம். ஆனால் சனநெரிசல் எதுவும் இடம்பெறவில்லை’ என்றார்.
‘இம்மரணங்கள் குறித்து ஊகம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அதனால் தாம் நாம் முன்னிலை தடயவியல் அணியை வரவழைத்துள்ளோம். இம்மரணங்களுக்கு நஞ்சு ஏதேனும் காரணமாக இருந்தால் அவர்கள் எமக்குத் தெரிவிப்பார்கள்’ என்றார்.