மத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது.
நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அரசாங்கம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 27ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த ஜனவரி முதல் இம்மாதம் வரை ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மார்ச் மாதத்தில் மாத்திரமே எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. பணவீக்கம் அதிகமாகவுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது.
எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டாலும் , எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.
தற்போது பதிவு செய்து சிட்டைகளை (டோக்கன்கள்) வழங்கும் முறைமையின் கீழ் எரிபொருளை விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த முறைமையைப் பின்பற்றினாலும் , வழங்குவதற்கு எரிபொருள் இல்லை என்பதே உண்மையாகும். அத்தோடு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு இதுவல்ல. இந்த தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
கடந்த 10 நாட்களில் மத்திய வங்கி 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் பணவீக்கம் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது.
இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக இந்த அரசாங்கம் இன்னும் உண்மையான பிரச்சினையை உணரவில்லை என்பது தெளிவாகிறது. அரசியலமைப்பு திருத்த விவகாரத்திலும் அரசாங்கம் மந்த போக்குடனேயே செயற்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாரம் முதல் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது என்றார்.