காலை நேரத்தில் மின் துண்டிப்பு மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டால் இணையவழி ஊடான பாடசாலை கல்வி நடவடிக்கையை மேற்கொள்வது கடினம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
நகர பிரதேச பாடசாலைகள் இந்த வாரம் மூடப்பட்டு, கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறையில் தொடர்வதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் காலை நேரங்களில் மின் துண்டிப்பு இடம்பெறாமல் இருப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் இரண்டு கட்டங்களாக மின் துண்டிக்கப்படும்.
என்றாலும் காலை நேரத்தில் மின் துண்டிப்பு ஏற்படுமாக இருந்தால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் இணையவழி ஊடாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது முடியாத காரியம்.
ஏனெனில் நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலைமையில் மின்துண்டிப்பு மேற்கொள்வது மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் ஒரே மாதிரி முன்னுரிமை வழங்க முடியாது.
என்றாலும் 27 ஆம் திகதி முதல் எதிர்வரும் 3ஆம் திகதிவரை மின் துண்டிக்கப்படும் கால நேரத்துக்கமைய மின்துண்டிப்பு ஆரம்பிக்கப்படுவது பிற்பகல் 1மணிக்காகும்.
அதன பிரகாரம் 27 ஆம் திகதி முதல் எதிர்வரும் 3ஆம் திகதிவரையான காலத்தில் ஏ முதல் எல் மற்றும் பீ இல் இருந்து டபிள்யூ என்ற வலயங்களில் பகல் நேரத்தில் ஒரு மணியும் 40 நிமிடங்கள் மற்றும் இரவு நேரத்தில் ஒரு மணியும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கி இருக்கின்றது.
என்றாலும் சீ வலயத்துக்கு எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதி தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை 6மணி முதல் காலை 8மணிவரையான 2 மணி நேர மின்துண்டிப்பு இடம்பெறுகின்றது.
அதேநேரம் எம்.என்.ஓ,வை.இஸட் ஆகிய வலயங்களுக்கு எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதி தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை 5மணி முதல் காலை 8மணிவரையான 3மணி நேர மின்துண்டிப்பு இடம்பெறுகின்றது என்றார்.