அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இருவகை சர்வதேச ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள ஜெவ்றி வெண்டர்சே டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.
உபாதை காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருந்த ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க மீண்டும் டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
சகலதுறை வீரர்களான கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன ஆகியோருக்கு டெஸ்ட் குழாத்தில் தொடர்ந்து இடம்கிடைத்துள்ளது.
பங்களாதேஷுக்கு எதிரான தொடரின்போது இலங்கை குழாத்தில் இடம்பெற்ற காமில் மிஷார, சுமிந்த லக்ஷான் ஆகியோர் நீக்கப்பட்டே பெத்தும் நிஸ்ஸன்கவுக்கும் ஜெவ்றி வெண்டர்சேவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் 9 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கை சார்பாக முன்னிலையில் இருந்த துனித் வெல்லாலகே, தயார்நிலை வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் வெண்டர்சேவுடன் மேலும் 3 சுழல்பந்துவீச்சாளர்களான லசித் எம்புல்தெனிய, ப்ரவீன் ஜயவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
கசுன் ராஜித்த, அவிஷ்க பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்தவுள்ளனர்.
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் 29ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை டெஸ்ட் குழாம்
திமுத் கருணாரட்ன (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன, கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, ப்ரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, ஜெவ்றி வெண்டர்சே.