நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.
பாரிய அளவில் உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கும் இந்தியாவினால் இலங்கையை தொடர்ந்து தோளில் சுமந்து கொண்டு செல்ல முடியாது என்றும் ஒட்டுமொத்த சர்வதேச தரப்பினது ஒத்துழைப்புக்களின் மூலமே இலங்கையால் நெருக்கடிகளிலிருந்து மீளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான தற்போதைய அரசாங்கம் பல்வேறு சர்வதேசத் தரப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலைமைகளில் இருந்து மீள்வதாக இருந்தால் முதலில் சர்வதேசத்தின் ஒட்டுமொத்தமான ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் அதற்கு தற்போதுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை தான் பிரதான தடையாக உள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
குறிப்பாக கூறுவதனால், நாட்டின் பொருளாதார நெருக்கடியானது, ‘நபர் ஒருவரால் ஏற்படுத்தப்பட்டது’ என்று சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த ஆழமான கூற்று, ஆட்சி அதிகாரத்தில் உள்ள நபரே தவறான, தாமதமான தீர்மானங்கள் காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், குறித்த நபரும் தான் தவறான தீர்மானங்களை எடுத்துள்ளதாக பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டும் உள்ளார். அவ்விதமான ஒருவர் பதவியில் இருக்கின்றபோது சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் எவ்வாறு உதவிகளை வழங்கும்.
அடுத்து, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கோட்டாபயவைரூபவ் ஏதேச்சதிகாரத் தலைவர் என்றே கருதுகின்றன. அதற்கு அவரது காலத்தில் இடம்பெற்ற ஜனநாயக விரேதச்செயற்பாடுகள் அடிப்படையாகின்றன. அவ்விதமான நிலைப்பாட்டில் உள்ள சர்வதேச நாடுகள் எவ்வாறு தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.
அடுத்து, நெருக்கடிகள் ஆரம்பித்து தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையிலும் தற்போது வரையில் உள்நாட்டில் உள்ள தலைசிறந்த பொருளாதார நிபுணர்களை ஒருங்கிணைத்து எதிர்காலம் குறித்து பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுமில்லை. பாதைவரைபடமொன்று கூட தயாரிக்கப்படவில்லை.
அதேபோன்று இலங்கை குறித்த பரீட்சமுள்ள சர்வதேச பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றிருக்கலாம். குறிப்பாகரூபவ் உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரும் நோபல் பரிசு பெற்றவருமான ஜோசப் போன்றவர்களை அணுகியிருக்காலம். அவ்விதமான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
அதேநேரம், வெளிவிவகார அமைச்சில் படைத்தரப்பு அதிகாரி நீக்கப்பட்டு சிவில் பிரதிநிதியான அருணி விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விதமானர்கள் முன்வந்து, நாட்டின் வெளிவிவகார பெருளாதார கொள்கையை மாற்றியமைத்து அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டும். தற்போது வரையில் அவ்விதமான முயற்சிகள் இடம்பெற்றமைக்கான பதிவுகள் இல்லை.
இந்த நிலையில் அயல்நாடான இந்தியா, பாரியளவில் இலங்கைக்கு உதவிகளை வழங்கி தனது தோளில் சுமந்துகொண்டிருக்கின்றது. இந்தியாவினால் இலங்கையின் ஒட்டுமொத்த தேவைகளை பூர்த்தி செய்து தொடுந்தும் தோளில் சுமக்க முடியாது.
அதேநேரம், கொடையாளர்கள் மாநாடு ஒன்றை நடத்துவது என்றால் கூட சாத்தியமாகாத நிலையில் தான் நாடு உள்ளது. குறித்த மாநாட்டில் கடன்களை மீளச் செலுத்தல் உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்த வரைவு கூட இல்லை.
ஒருவேளை வரைவு தயாரிக்கப்பட்டால் கூட நிபுணர்கள் குழு இல்லாத நிலையில் அதில் கையொப்பமிடுபவர்கள் யார் என்ற பிரச்சினைகள் உள்ளன. அவ்விதமான நிலையில் எவ்வாறு சர்வதேசம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று எதிர்பாக்க முடியும் என்றார்.