அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது துவிச்சக்கர வண்டியில் டெலாவர் பிராந்தியத்தில் ரெஹோபோத் கடற்கரையிலுள்ள தனது இல்லத்திற்கு அருகிலுள்ள கேப் ஹென்லோபென் பிராந்திய பூங்காவிற்கு அந்நாட்டு நேரப்படி நேற்று சனிக்கிழமை (18.06.2022) சென்றபோது, அவர் அந்த துவிச்சக்கரவண்டியிலிருந்து கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பாதுகாவலாக சென்ற அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவினர் விரைந்து சென்று கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கி விட்டனர்.
இந்த சம்பவத்தில் ஜோ பைடனுக்கு (79 வயது) காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து தன்னைச் சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு ஜோ பைடன் விளக்கம் அளிக்கையில் தான் நன்றாக இருப்பதாகக் கூறினார்.
தலைக்கவசம் அணிந்து பயணித்த ஜோ பைடன் வழியில் தன்னை எதிர்கொண்ட நலன் விரும்பிகளைக் கண்டு அவர்களுடன் உரையாடும் முகமாக துவிச்சக்கரவண்டியிலிருந்து இறங்க முயற்சித்த போதே அவர் தனது வலது பக்கமாக நிலத்தில் விழுந்து உருண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சம்பவத்தையடுத்து தனது மெய்ப்பாதுகாவலர்களின் துணையுடன் எழுந்த அவர், அங்கு கூடியிருந்தவர்களுடன் புன்னகையுடன் உரையாடினார்.
ஜோ பைடனுக்கு இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவ கவனிப்பு எதுவும் தேவைப்படவில்லை எனவும் அவர் நலமாக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.