நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்குவதற்கான பொருளாதாரத்திட்டம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று 20 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியின் கீழான பொருளாதார செயற்திட்டம் தொடர்பில் பீற்றர் ப்ரூயெர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினால் கடந்த மேமாதம் 9 – 24 ஆம் திகதிவரை இலங்கை அதிகாரிகளுடன் நிகழ்நிலையில் முன்னெடுக்கப்பட்டுவந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குரிய செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவை நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கைவிடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக அந்நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் வெளிநாட்டுக்கடன்களை மறுசீரமைப்பதற்குத் தீர்மானித்ததுடன், புதிதாக நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களையும் நியமித்தது.
அதன்படி இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தமது கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.