விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 48 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது.
இந்த முடிவுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்கா 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்தியா, 3 போட்டிகளுடன் தொடர் தோல்வியைத் தவிர்க்கும் குறிக்கோளுடன் இந்தப் போட்டியை எதிர்கொண்டு அதில் வெற்றியும் அடைந்தது.
ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவுக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 10 ஓவர்களில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இருவரும் தலா 35 பந்துகளை எதிர்கொண்டதுடன் கெய்க்வாட் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் அதரடியில் இறங்கிய ஹார்திக் பாண்டியா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் ட்வேய்ன் ப்ரிட்டோரியஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.
இந்திய பந்துவீச்சாளர்களிடம் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்க அணியில் ஐவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
ஹெய்ன்ரிச் க்ளாசென் (29), ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (23), வெய்ன் பார்னல் (22 ஆ. இ.), ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் (20), கேஷவ் மஹாராஜ் (11) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றவர்களாவர்.
இந்திய பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.