இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
கவிஞரும், முன்னணி இயக்குநருமான சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘இடிமுழக்கம்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருக்கிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியிலான புலனாய்வு கதையை மையப்படுத்திய ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் ஜீ.வி. பிரகாஷ் குமார் எளிய மனிதனின் தோற்றத்திலும், கையில் ரத்தம் தோய்ந்த ஆயுதத்துடன் நிலை குத்திய பார்வையுடன் தோன்றுவது, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ‘பேச்சுலர்’, ‘செல்ஃபி’, ‘ஐங்கரன்’ என வரிசையாக வணிக ரீதியிலான வெற்றி படத்தையும் ஜீ. வி. பிரகாஷ் குமார் வழங்கி வருவதால், திரையுலக வணிகர்கள் ‘இடிமுழக்கம்’ படமும் பாரிய அளவில் வெற்றிபெறும் என அவதானிக்கிறார்கள்.