பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் அரங்கில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோக்கோவை 2 நேர் செட்களில் இலகுவாக வெற்றிகொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
இந்த வெற்றியுடன் 21ஆம் நூற்றாண்டில் மகளிர் டென்னிஸ் சங்க தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் ஈட்டிய தொடர்ச்சியான 35 வெற்றிகளை இகா ஸ்வியாடெக் சமப்படுத்தியுள்ளார்.
மேலும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் வென்றெடுத்த 2ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸில் தனது முதலாவது சம்பியன் பட்டத்தை ஸ்வியாடெக் சுவீகரித்திருந்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நுட்பத்திறனுடனான அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் கோக்கோ கோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
68 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக் 6 – 1, 6 – 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டினார்.
மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) இறுதிப் போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றி தோல்வி அடைந்ததால் 18 வயதான கோக்கோ கோவ் கண்ணீர் விட்டு அழுததை அவதானிக்க முடிந்தது.
இந்த வெற்றியுடன் 21 வயதான இகா ஸ்வியாடெக், தலைசிறந்த வீராங்கனைகளின் ஒருவர் என்பதை நிரூபித்தார்.