ஆகாச கருடன் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.
ஆகாசக் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இதற்கு சாகா மூலி என்ற பெயரும் உண்டு.
இந்தக் கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. வீட்டிற்கும் நமக்கும் ஏற்படும் திருஷ்டி, தோஷங்களைப் போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் முதலான மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.
பெரும்பாலான வீடுகளில் இந்த கிழங்கை திருஷ்டிக்காக வீடுகளில் கட்டி தொங்க விடுகின்றனர். வராந்தாவின் மேல் தளத்திலோ அல்லது நிலவரையின் நடுப்பகுதியிலோ இதனை கட்டி வைப்பதால் வீட்டிற்குள் எந்தவித விஷமுள்ள ஜந்துக்களும், சிறிய பூச்சிகளும் கூட வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதன் வாசம் அவைகளுக்கு பிடிப்பதில்லையாம். உங்கள் வீட்டில் எந்த வகையான விஷ பூச்சிகளும் வராமல் இருப்பதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முக்கியமாக பில்லி, சூனியம், ஏவல் போன்ற எத்தகைய தீய சக்திகளும் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்த கிழங்கு அதனை உட்கிரகித்து தன்னை தானே தற்கொலை செய்து கொண்டு அழிந்து விடும். அதாவது கொடிகள் வளராமல் காய்ந்துவிடும். இதனால் அந்த வீட்டில் இருப்போர் பல பிரச்சனைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். பின்னர் அதற்குரிய பரிகாரங்கள் மேற்கொண்டு அல்லது பூஜைகள் செய்து விட்டு புதியதாக ஒரு கிழங்கை வாங்கி இதே போல் கட்டி வைத்து விடலாம்.
மாறாக உங்கள் வீட்டில் தீய சக்திகளன்றி நல்ல சக்திகள் இருக்குமேயானால் இந்த கிழங்கு முளைவிட்டு பசுமையான கொடிகளாக வளரக்கூடியது. மிகவும் அழகாக காட்சியளிக்கும். பசுமை தன்மை இருக்கும் வரை உங்கள் இல்லம் மகிழ்ச்சிகரமான இல்லமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதன் விசித்திரமான தோற்றம், வித விதமான தோற்றம் காரணமாக இதனை கட்டி தொங்க விட்டால் அதன் நிழல் கருடன் பறப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். இதனால் பாம்புகள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். ஆகாயத்தில் கருடன் பறப்பது போன்ற தோற்றமுடையதால் இந்த பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது.
வீட்டில் திருஷ்டி முழுவதும் கழிந்துவிடும். இல்லத்தில் பொன்னும் பொருளும் சேரும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.