அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதை பாவச்செயலாக கருதுகிறேன். அரசியலமைப்பின் 21 ஆம் திருச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது பொது மக்கள் தமது மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளுக்கு முன்பாக ஒன்று கூட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவத்தார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் புதன்கிழமை (1) கொழும்பில் இடம்பெற்ற அரசியல் உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலின் போது கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்ட மூலவரைபில் பல சாதகமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு பிரத்தியேகமான முறையில் அவதானம் செலுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியான மாற்றமடைந்து முழு அரசியல் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்டமைப்பில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
அரசியல் கட்டமைப்பிற்கான மாற்றத்தை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் இருந்து ஆரம்பிப்போம். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்த்திற்கு எதிராக செயற்பட்ட நான் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதை ஒரு பாவசெயலாக கருதுகிறேன்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்ததை தோற்கடிக்க பாராளுமன்றத்திற்குள்ளும்,அரசியல் கட்சிக்குள்ளும் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. அரசியல் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது தமது பிரதிநிதிகளின் வீடுகளுக்கு முன்பாக ஒன்று கூடி அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.