கச்சதீவினை தமிழகம் மீள பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் என்பதனை தமிழக முதல்வர் அனுதாபத்துடன் அணுகி கச்சத்தீவினை மீளப்பெறுவதற்கான விடயங்களை வலியுறுத்தாது இரு சாராரிடமும் பேசி தீர்த்து செயல்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார் .
யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கை தமிழர்களுடைய பிரச்சனைகளில் கூடுதலான கரிசனை எடுக்கின்ற தலைவர்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டார்லினையும் ஒருவராகக் கருதுகின்றோம்.
தமிழக மீனவர்களின் மீன்பிடியானது கச்சத்தீவு வரை செல்லவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் , கச்சதீவினை மீண்டும் வழங்குமாறு கேட்டுள்ளார்கள் .
வடகிழக்கு மீனவர்கள் தொழில் புரியும் கடற்கரையோரங்களில் , சிங்கள மீனவ தொழிலார்களின் சுரண்டல் மற்றும் தமிழக மீனவர்களின் சுரண்டலால் தமிழ் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
எனவே இரண்டு பக்கங்களிலும் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுப்பதுடன் , இலங்கை வாழ் தமிழர்களையும் தனது தமிழ் மக்களாக பார்க்க வேண்டும்.
கச்சதீவினை தமிழகம் மீள பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் என்பதனை தமிழக முதல்வர் அனுதாபத்துடன் அணுகி , கச்சத்தீவினை மீளப்பெறுவதற்கான விடயங்களை வலியுறுத்தாது இரு சாராரிடமும் பேசி தீர்த்து செயல்படுவது என்பது அவரால் மாத்திரமே முடியும்.
இதேவேளை 21 ஆம் திருத்தத்தில் ஆரம்பத்தில் உள்ள மொழி , மத உரிமை , மனித அடிப்படை உரிமை அப்படியே இருக்கத்தக்கதாக 20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீள பாராளுமன்றத்திற்கு போகிற வேலையே தவிர , தமிழ் மக்களுக்கு சார்பான , தீர்வான எந்த விடயங்களும் 21 ஆம் திருத்தத்தில் இல்லை.
மக்களுக்கு சார்பான விடயமாக எந்த விடயங்களும் 21 ஆம் திருத்தத்தில் இல்லை . இது அபரீவிதனமான அதிகாரங்களை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளாவே நான் பார்க்கிறேன்.
எனவே 20 ஆவது திருத்தமோ 21 ஆவது திருத்தமோ வரப்போவதில்லை என்பது எனது சொந்தக்கருத்து என்றார் .