பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ராவல்பிண்டியில் இருந்து முல்தானுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
ராவல்பிண்டியை அண்மித்துள்ள தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிலவும் அரசியல் நிச்சயமற்றத் தன்மையை கருத்தில்கொண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முல்தானில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் போட்டி நடைபெறும் தினங்கள், நேரம் என்பன ஏற்கனவே திட்டமிட்டவாறு இருக்கும் என சபை தெரிவித்துள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் ஜூன் மாதம் 8ஆம், 10ஆம், 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள போட்டிகள் ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் (தகுதிகாண்) போட்டியின் ஓர் அங்கமாக அமையும்.
இந்தத் தொடரை ராவல்பிண்டியில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்த அதேவேளை, முல்டானை பதில் விருப்பு இடமாக வைத்திருந்தது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தலைநகரில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதை அடுத்தே போட்டிகளை முல்தானில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்தது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கடந்த 25ஆம் திகதி நடத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறிப்படத்தக்க அளவு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கராச்சி மற்றும் லாகூர் ஆடுகளங்கள் சீரமைக்கப்பட்டுவருவதுடன் பெஷாவர் மைதானம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக முல்தான் மைதானம் மாத்திரமே போட்டிகளை நடத்தக்கூடிய நிலையில் இருந்துவருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள முல்தான் அதிகூடிய உஷ்ணம் நிலவுவதுடன் போட்டி நடைபெறும் நாட்களில் 40 செல்சியஸ் பாகைவரை உஷ்ணம் நிலவும் என கூறப்படுகின்றது.
கடந்த வருடம் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரே அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தபோதிலும், 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் மாத்திரமே பூர்த்திசெய்யப்பட்டது.
கொரோனா தொற்றுநோய் பரவியதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டிருந்தது.