அரச ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானங்களே எடுக்கப்பட வேண்டும். காரணம் தேசிய வரி வருமானத்தில் 86 சதவீதம் அரச ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவிற்கும் , ஓய்வூதியம் வழங்குவதற்கும் செலவிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கொள்கை தயாரிப்பாளர்கள் தொழிநுட்ப ரீதியிலான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
காரணம் மாதாந்தம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் வரி வருமானத்தில் 86 சதவீதம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள கொடுப்பனவிற்கும் ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் செலவிடப்படுகிறது.
இவ்வாறு வருமானத்தில் பெருந்தொகை இதற்காக செலவிடப்பட்டால் ஏனைய செலவுகளுக்கு என்ன செய்வது?
இதன் காரணமாகவே நாட்டில் கால காலமாக கடன் பெறப்படுகிறது. இந்த முறைமையே தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்பட்ட கடன்களினாலேயே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த கடன்களை மீள செலுத்துவதிலும் பாரிய சிக்கல் காணப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.
எவ்வாறிருப்பினும் சகலருக்கும் நிவாரணம் வழங்கும் வகையிலான வரவு – செலவு திட்டமொன்றை விரைவில் முன்வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பிலும் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டது. விரைவில் அதனை முன்வைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றார்.
அண்மையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அவை உண்மைக்கு புறம்பான செய்திகள் என்று பிரதமர் அலுவலகம் மறுப்பு வெளியிட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் பிரதமர் தெரிவித்துள்ளதைப் போன்று நிவாரண வரவு – செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்பட்டிருக்குமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.