உஸ்பெகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை கால்பந்தாட்ட அணி தற்போது கத்தாரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அஸ்பயர் பயிற்சியக மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் 33 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாம், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த தலைமைப் பயிற்றுநர் அண்ட்றூ மொறிசனிடம் பயிற்சி பெற்றவருகின்றது.
‘இன்று ஆசைப்படுங்கள், நாளை ஊக்கம் பெறுங்கள்’ என்ற தொனிப்பொருளில் கத்தார், அஸ்பயர் பயிற்சியகம் 2004 இல் இருந்து இயங்கி வருகிறது.
கால்பந்தாட்டம் உட்பட பல்வேறு விளையாட்டுக்களில் இளைஞர்களுக்கு உயர் தொழில்நுட்பத்துடன் பயிற்சிபெறக்கூடிய வசதிகள் அஸ்பயர் பயிற்சியகத்தில் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் அஸ்பயர் பயிற்சியகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை கால்பந்தாட்ட வீரர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அஸ்பயர் பயிற்சிகத்தில் இன்னும் பல நாடுகளின் கால்பந்தாட்ட அணிகள் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. அவற்றில் நேபாளமும் ஒரு நாடாகும்.
இந் நிலையில் நேபாள அணியுடன் நட்புறவு பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி மூடிய அரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (31) விளையாடவுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பயற்சிகளை சுமுகமாக நடத்தயிருக்க முடியாது எனத் தெரிவித்த இலங்கை கால்பந்தாட்டக் குழாத்தில் இடம்பெறும் அதிகாரி ஒருவர், அஸ்பயர் பயற்சிகம் கிட்டத்தட்ட கால்பந்தாட்ட சுவர்க்கம் போல் உணரப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இயற்கை புற்தரையைக் கொண்ட இந்த மைதானங்களில் விளையாடுதவற்கு இலங்கை வீரர்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், இத்தகைய மைதானம் ஒன்றில் இலங்கை அணி பயிற்சிபெறுவது இதுவே முதல் தடவை எனவும் கூறினார்.
தேசிய அணி இலங்கையில் பயிற்சி பெற்றிருந்தால் இன்றைய சூழ்நிலையில் வேளாவேளைக்கு சாப்பாடு உட்பட மற்றைய வசதிகள் கிடைத்திருக்காது என்று சுட்டிக்காட்டிய அவர், , கத்தாரில் ஒரு குறையும் இல்லாமல் மிகுந்த திருப்தியுடன் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, அஸ்பயர் பயிற்சியகத்தில் பயிற்சிபெறுவதற்கு ஏற்பாடு செய்துகொடுத்த கத்தார் கால்பந்தாட்ட சங்கப் பிரதிநிதிகள், அஸ்பயர் பயிற்சியக நிருவாகத்தினர், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோருக்கு இலங்கை கால்பந்தாட்ட அணியினர் கடமைப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட அணியின் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
கத்தாரில் பயிற்சிபெற்றுவரும் இலங்கை கால்பந்தாட்ட குழாத்தில் இடம்பெறும் வீரர்களில் 21 பேர் மாத்திரம் ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஜூன் 3ஆம் திகதி உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளனர். அவர்களுடன் பயிற்சிக் குழாத்திலுள்ள 12 அதிகாரிகளும் அங்கு செல்லவுள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை அணியினருடன் கத்தாரில் டிலொன் டி சில்வா இணைந்துகொண்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
முழங்காலில் உபாதைக்கு உள்ளாகியுள்ள டிலிப் பீரிஸ் மற்றும் சம்பளப் பிரச்சினையைக் காரணம் காட்டி இலங்கை அணியில் இணைய மறுத்துள்ள வசீம் ராஸிக் ஆகியோருக்கு பதிலாக எம்.என்.எம். பஸால், சமோத் டில்ஷான் ஆகிய இருவரும் உஸ்பெகிஸ்தான் செல்லவுள்ளதாக அவர் மேலும் கூறினார.
ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்று உஸ்பெகிஸ்தானில் எதிர்வரும் ஜுன் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சி குழுவில் இடம்பெறும் இலங்கை, தனது முதலாவது போட்டியில் வரவேற்பு நாடான உஸ்பெகிஸ்தானை ஜூன் 8ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
தாய்லாந்தை 11ஆம் திகதி சந்திக்கவுள்ள இலங்கை, கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை ஜூன் 14ஆம் திகதி எதிர்த்தாடும்.