உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள அரசாங்கம் இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலிடமிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது மரவள்ளிக்கிழங்கு,பயறு உள்ளிட்ட மேலதிக பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டும்.
தேசிய விவசாயத்துறை வீழ்ச்சிக்கும்,எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையினால் ஏற்பட போகும் விளைவிற்கான பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்க வேண்டும் என ஒன்றினைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.
ஒன்றினைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு எதிர்வரும் காலங்களில் உலகளாவிய ரீதியில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளனர்.விவசாயத்துறையின் முன்னேற்றமடைந்த நாடுகள் கூட உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.பெருமளவிலான நாடுகள் உணவினை களஞ்சியப்படுத்தி வருகின்றன.
தவறான உர கொள்கையினால் கடந்த காலங்களில் பெரும்போக விவசாயமும்,சிறுபோக விவசாயமும் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.எரிபொருள் பற்றாக்குறை,மற்றும் உரம் இன்மை ஆகிய காரணிகளினால் இம்முறை சிறுபோக விவசாயமும் பாதிக்கப்படும்,50 சதவீத விளைச்சலை கூட பெறுவது சாத்தியமற்றதுஃ
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உரம் இன்மையினால் அரிசி பயிர்ச்செய்கையில் ஈடுப்படும் பிரதான மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்தில் ஈடுப்படுவதை புறக்கணித்துள்ளார்கள்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிச்சயம் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.
விவசாயத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும்,எதிர்வு கூறல்களையும் அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்தியதன் பிரதிபலனை முழு நாடும் தற்போது எதிர்க்கொள்கிறது.எதிர்நோக்கவுள்ள அரிசி தட்டுப்பாட்டை வெற்றிக்கொள்ள அரசாங்கம் முறையான திட்டங்களை வகுக்க வேண்டும்.தற்போதைய நிலைமையில் மேலதிகமாக 6-7 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட வேண்டும்.டொலர் இன்மையினால் அதுவும் சாத்தியமற்றது.
எதிர்நோக்கவுள்ள உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோதுமை மாவினை இறக்குமதி செய்ய வேண்டும்,அல்லது இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் உணவு பொருட்களின் கிடைப்பனவை அதிகரிக்க வேண்டும்.அல்லது நாட்டின் நிலப்பரப்பு,நீர் மற்றும் மனித வளத்தை பயன்படுத்தி மரவள்ளி கிழங்கு,பயறு ஆகிய மேலதிக பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
விவசாயத்துறையும் விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிக்கும்,எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள உணவு தட்டுப்பாட்டினால் ஏற்பட போகும் விளைவிற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.