கனடாவின் மொன்ரியல் வீதிகளில் ஆர்பாட்டத்தில் இறங்கிய பெண்கள்
கனடாவின் மொன்ரியல் பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட பெண்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
தமது பிராந்தியத்தில் வசிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது எமிலி கேம்லின் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி நொட்ரே டாம் பசிலிக்கா வரை சென்றடைந்தது. இதன் போது ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்த குழுவின் தலைவர் எலன் கேப்ரியல் அங்கு உரையாற்றினார்.
இதில், பெண்களை பாதுகாப்பதற்கான வளப்பற்றாக்குறை மத்திய அரசிடம் காணப்படுகின்றமை குறித்தும், காணாமல் போன பெண்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான போதிய பயிற்சிகளை பொலிஸாருக்கு வழங்குவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், அரச நடவடிக்கைகள் சார்ந்தும், கல்விச் செயற்பாடுகள் சார்ந்தும் பல ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டி அவர், எதிர்வரும் காலங்களில் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையில் காலம் தாழ்த்துவது தவறானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறான போதும் கடந்த மாதம், கனடா அரசாங்கம் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பெண்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கும் என்று வாக்குறுதி அளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.