பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூர், பங்ளா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவதும் கடைசியுமான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை 1 – 0 என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை தனதாக்கிக்கொண்டது. அத்துடன் இந்த வெற்றிக்கான 12 டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்ற இலங்கை தொடரில் மொத்தம் 18 புள்ளிகளை சம்பாதித்துக் கொண்டது.
பங்களாதேஷை 2ஆவது இன்னிங்ஸில் 169 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, வெற்றிக்கு தேவையான 29 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றது.
இலங்கையின் வெற்றியில் அசித்த பெர்னாண்டோவின் 10 விக்கெட் குவியலுடனான திறமையான பந்துவீச்சு முக்கிய பங்காற்றியது.
ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த சதங்கள், திமுத் கருணாரட்ன, ஓஷத பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பனவும் இலங்கையின் வெற்றியில் பங்களிப்பு செய்திருந்தன.
பங்களாதேஷின் 1ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ, 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஓர் இன்னிங்ஸுக்கான சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் முழுப் போட்டிக்கான (144 – 10 விக்.) சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் பதவி செய்தார்.
போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ், மொத்த எண்ணக்கை 53 ஓட்டங்களாக இருந்தபோது ராஜித்தவின் பந்துவீச்சில் முஷ்பிக்குர் ரஹிம் (23) ஆட்டமிழந்தார்.
எனினும் லிட்டன் தாஸ், சிரேஷ்ட வீரர் ஷக்கிப் அல் ஹசன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் இருவரையும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழக்கச் செய்த அசித்த பெர்னாண்டோ, போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
லிட்டன் தாஸ் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தனது பந்துவீச்சிலேயே பிடி எடுத்து அவரை ஆட்டமிழக்கச் செய்த அசித்த பெர்னாண்டோ, 7 ஓட்டங்கள் கழித்து ஷக்கிப் அல் ஹசனையும் ஆட்டமிழக்கச் செய்தார்.
58 ஓட்டங்களைப் பெற்ற ஷக்கிப் அல் ஹசன், அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் டிக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து மொசாதெக் ஹொசெய்ன் (9), தய்ஜுல் இஸ்லாம்(1), காலித் அஹ்மத் (0) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, விக்கெட் இழப்பின்றி 29 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடரின் ஆட்டநாயகனாக அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
எண்ணிக்கை சுருக்கம்
பங்களாதேஷ் 1ஆவது இன்: 365 (முஷ்பிக்குர் ரஹிம் 175 ஆ.இ., லிட்டன் தாஸ் 141, கசுன் ராஜித்த 64 – 5 விக்., அசித்த பெர்னாண்டோ 93 – 4 விக்.)
இலங்கை 1ஆவது இன: 506 (ஏஞ்சலோ மெத்யூஸ் 145 ஆ.இ., தினேஷ் சந்திமால் 124, திமுத் கருணாரட்ன 80, தனஞ்சய டி சில்வா 58, ஓஷத பெர்னாண்டோ 57, ஷக்கிப் அல் ஹசன் 96 – 5 விக்., ஈபாதொத் ஹொசெய்ன் 148 – 4 விக்.)
பங்களாதேஷ் 2ஆவது இன்: 169 (ஷக்கிப் அல் ஹசன் 58, லிட்டன் தாஸ் 52, முஷ்பிக்குர் ரஹிம் 23, அசித்த பெர்னாண்டோ 51 – 6 விக்., கசுன் ராஜித்த 40 – 2 விக்.)
இலங்கை 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 29) விக்கெட் இழப்பின்றி 29 (ஓஷத பெர்னாண்டோ 22 ஆ.இ., திமுத் கருணாரட்ன 7 ஆ.இ.)