அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை ஆகவே பொது மக்கள் இயலுமான அளவு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் கட்டாயம் ஈடுப்பட வேண்டும் என தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார்.
விவசாயத்துறை எதிர்க்கொண்டுள்ள மிக மோசமான நிலைமை, எதிர்வரும் காலங்களில் ஏற்பட போகும் உணவு தட்டுப்பாடு தொடர்பில் வியாழக்கிழமை (26.05.2022) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் ஈடுப்பட தற்போது இரசாயன உரமும் இல்லை,சேதன பசளையும் இல்லை. விவசாயிகள் உர பற்றாக்குறையுடன் மேலதிகமாக தற்போது எரிபொருள் பிரச்சினையையும் எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.
எரிபொருள்,உரம் இவ்விரண்டும் இல்லாவிடின் குறைந்தபட்ச அளவிலேனும் விவசாய நடவடிக்கையில் ஈடுப்பட முடியாத நிலைமை ஏற்படும்.
ஒரு வருடத்திற்கு மாத்திரம் 33 இலட்சம் மெற்றிக்தொன் அரசி இறக்குமதி செய்யப்படும்.டொலர் நெருக்கடி காரணமாக உணவு பொருட்களின் இறக்குமதியும் எதிர்வரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படலாம்.
தவறான சேதன பசளை திட்டத்தினால் பெரும்போக விவசாயத்தில் நெற் பயிர்ச்செய்கையின் விளைச்சர் 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் மிக மோசமான விளைவுகளை எதிர்க்கொண்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட போகிறது.அதனை எதிர்க்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வெறும் பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டுக்கொள்கிறதே தவிர செயல் ரீதியில் முன்னேற்றகரமான வகையில் எவ்வித தீர்மானங்களையும் இதுவரையில் செயற்படுத்தவில்லை.
உணவு தட்டுப்பாடு தீவிரமடைந்தால் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாத காலப்பகுதியில் மக்கள் உணவின்றி பட்டினியால் உயிரிழக்கும் அவல நிலைமை ஏற்படும்.
நடுத்தர மக்களால் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்த நிலையில் தான் உள்ளது.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கிடையாது.ஆகவே பொது மக்கள் வெற்றுக் காணிகளில் தங்களால் முடிந்த வரை வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுப்படுவது அத்தியாவசியமானது.தமக்கான உணவு பொருட்களை தாமே உற்பத்தி செய்துக்கொண்டால் எதிர்க்கொள்ள வேண்டிய சவால்களை இயலுமான வரையிலாவது இழிவளவாக்கிக்கொள்ளலாம் என்றார்.