2025இல் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள 3ஆவது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் (ICCWC) தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கையை 8இலிருந்து 10ஆக ஐசிசி அதிகரித்துள்ளது.
10 அணிகள் பங்குப்பற்றும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடர் 2022 – 2025 கால சக்கரத்தில் நடத்தப்படுவதுடன் முன்னர் இருந்த 8 அணிகளுடன் பங்களாதேஷும் அயர்லாந்தும் புதிய அணிகளாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய 10 அணிகளும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பில் 3 போட்டிகள் கொண்ட தலா 8 தொடர்களில் விளையாடும். பங்குபற்றும் அணிகளின் இணக்கப்பாட்டுடன் 4 தொடர்கள் சொந்த மண்ணிலும் 4 தொடர்கள் அந்நிய மண்ணிலும் நடத்தப்படும்.
இலங்கை தனது சொந்த மண்ணில் இந்தியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளையும் அந்நிய மண்ணில் இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாடுகளையும் எதிர்த்தாடும்.
ஐசிசி போட்டி நிகழ்ச்சிகளுக்கு முன்பதாக உலகம் முழுவதும் உள்ள இரசிகர்களுக்கு உயர்தர கிரிக்கெட் போட்டிகளைக் கண்டுகளிக்கக்கூடியதாக சம்பியன்ஷிப் போட்டிகள் வழைமையாக நடத்தப்படவுள்ளன.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தவுள்ள வரவேற்பு நாடும், ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் முதல் 5 இடங்களைப் பெறும் அணிகளுமாக 6 அணிகள் நேரடியாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெறும்.
ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பில் மிஞ்சும் 4 அணிகளுடன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை அடிப்படையில் தெரிவாகும் 2 அணிகளுமாக 6 அணிகள் பங்குபற்றும் உலக தகுதிகாண் சுற்றின் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள மற்றைய 2 அணிகள் தீர்மானிக்கப்படும்.
5 நாடுகளுக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்து
நெதர்லாந்து, பப்புவா நியூ கினி, ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இணை உறுப்பு மகளிர் நாடுகளுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த அணிகளின் சர்வதேச ஒருநாள் போட்டி பெறுபேறுகள் மூலம் கிடைக்கும் தரவரிசை புள்ளிகளின் அடிப்படையில் 2025 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதாண் சுற்றில் விளையாடவுள்ள அணிகள் தீர்மானிக்கப்படும்.
ஐசிசியின் உலகளாவிய வளர்ச்சி வியூகத்திற்கு ஏற்ப இந்த முடிவுகள் ஐசிசி சபையினால் எடுக்கப்பட்டதாக ஐசிசி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெவ் அலார்டைஸ் தெரிவித்தார்.