இலங்கை – பாகிஸ்தன் மகளிர் அணிகளுக்கு இடையில் கராச்சி, சவுத்எண்ட் கழக கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
சர்வதேச அரங்கில் அறிமுக வீராங்கனை துபா ஹசன் துல்லியமாக பந்துவீசி பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டார்.
அதிரடி ஆரம்ப வீராங்கனை சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் சகல துறைகளிலும் பிரகாசித்த மிஸ்மா மாறூவ் தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணி ஒருளவு இலகுவாக வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அனுபவம் வாய்ந்த ஹாசினி பெரேரா (4), சமரி அத்தப்பத்து (6) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை இலங்கை மகளிர் அணிக்கு பேரிடியாக அமைந்தது.
துபாயில் நடைபெற்ற பெயார்ப்ரேக் சர்வதேச அழைப்புக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி ஒரு சதத்துடன் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த அத்தபத்து இந்தப் போட்டியில் பிரகாசிக்கத் தவறியமை அணிக்கு பேரிடியாக அமைந்தது.
எவ்வாறாயினும் ஹர்ஷிதா மாதவி (25), அனுஷ்கா சஞ்சீவனி (16), நிலக்ஷி டி சில்வா (25), அமா காஞ்சனா (12) ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கி இலங்கை சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர்.
பாகிஸ்தான் மகளிர் பந்துவீச்சில் துபா ஹசன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்கள் பந்துவீசி 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இவரைவிட அனாம் அமின் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அய்மான் அன்வர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்ற இலகுவாக வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை ஒரு ஓட்டமாக இருந்தபோது குல் பெரோஸா (0) ஆட்டமிழந்தார்.
ஆனால், மற்றைய ஆரம்ப வீராங்கனை முனீபா அலி (18), இராம் ஜாவேட் (18) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி வீழ்ச்சியை ஓரளவு கட்டுப்படுத்தினர்.
மொத்த எண்ணிக்கை 45 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த அணித் தலைவர் பிஸ்மா மாறூவ் (28), நிதா தார் (36 ஆ.இ.) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் வெற்றியை இலகுவாக்கினர்.
ஆயிஷா நசீம் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கை மகளிர் பந்துவீச்சில் ஓஷாதி ரணசிங்க 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.