ஜனாதிபதி தோல்வி என்பதற்காக நாட்டை தோற்கடிக்க முடியாது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவின் இந்த அரசாங்கமும் மூன்று மாதகாலத்திற்கு மேல் நீடிக்காது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைய எதிர்வரும் நாட்களில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுக்கொள்கைக்கமைய ஒரு தீர்மானத்தை முன்னெடுக்கவில்லை.
அரசியல் மற்றும் பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்ற மட்டத்தில் முறையான தீர்வு எட்டப்படவில்லை.
நாட்டு மக்களின் நிலைமையினை கருத்திற்கொண்டு அரசியல் கொள்கையை புறக்கணித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றிணைந்துள்ளேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது வெறுப்பு காணப்படுகிறது. ஜனாதிபதி பதவி மீது மதிப்பளித்து அவரிடமிருந்து அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டேன்.
ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து விட்டு எவ்வாறு அவரின் முகத்தை பார்த்துக்கொண்டு, அவரிடமிருந்து அமைச்சு பதவிகளை பெற்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருசில உறுப்பினர்கள் விமர்சிக்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இறுதித் தருணத்தில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இணக்கம் தெரிவித்தார்.
பிரதமர் பதவியை ஏற்கும் எதிர்க்கட்சி தலைவரது தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருந்தால் அவரும் ஜனாதிபதியின் முகத்தை பார்த்து, ஜனாதிபதியிடமிருந்து தான் பிரதமர் பதவிக்கான நியமனத்தை பெற்றிருக்க வேண்டும் ஆகவே பொருத்தமற்ற தர்க்கத்தை முன்வைப்பதை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றது மனசாட்சிக்கு விரோதமானது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.சேர் பெய்ல் (ஜனாதிபதி தோல்வி) என்பதை தற்போதும் குறிப்பிடுகிறேன்.ஜனாதிபதி தோல்வி என்பதற்காக நாடு தோல்வியடைய இடமளிக்க முடியாது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நீக்கம்,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம்,21ஆவது திருத்தம் நிறைவேற்றம் ஆகிய முக்கிய விடயங்களை அரசாங்கம் செயற்படுத்தாவிடின் இந்த அரசாங்கமும் 3 மாத காலம் வரை நீடிக்காது.அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் ஒரு நொடி பொழுது கூட அமைச்சு பதவி வகிக்கமாட்டேன்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து 21ஆவது திருத்தத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.