மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடின் 250 பில்லியன் ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் கருத்து கணிப்பு கோரப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் பற்றாக்குறை காரணமாகவே எரிபொருள் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க இலங்கை மின்சார சபை உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மின்விநியோக தடை 3மணித்தியாலங்கள் அளவு மட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த காலத்தை காட்டிலும் மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ளது.மின்கட்டணத்தை அதிகரிப்பது குறித்த யோசனையை அரசாங்கம் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.
2014ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு மின்கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை,தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பிற்கு புதிதாக மின்நிலையங்களும் இணைத்துக்கொள்ளப்படாத காரணத்தினால் மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பு பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.
மின்னுற்பத்திக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலைமையில் மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடின் 250 பில்லியன் நட்டத்தை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.
ஆகவே மின்கட்டண அதிகரிப்பு குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை விரைவில் முன்னெடுக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை நள்ளிரவில் அதிகரிப்பதை போன்று மின்கட்டணத்தை நள்ளிரவில் அதிகரிக்க முடியாது.மின்கட்டண அதிகரிப்பு குறித்து பொதுபயன்பாட்டு ஆணைக்குழு முறையான பரிந்துரைகளை முன்னெடுக்கும்.மின்கட்டண அதிகரிப்பு குறித்து பொது மக்களிடம் கருத்து கணிப்பு கோரப்படும் என்றார்.