கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு பலருக்கும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு கோளாறுகளும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
அதில் இளம் வயதினருக்கு குய்லின் பார் சிண்ட்ரோம் எனப்படும் நரம்புத்தளர்ச்சி பாதிப்பும் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்களுக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு உங்களில் யாரேனும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதோ அல்லது படிக்கட்டுகளில் ஏறவோ கடும் சிரமம் ஏற்படுவது, உங்கள் கை விரல்கள், கால் விரல்கள், கணுக்கால் அல்லது மணிக்கட்டுகளில் குத்துவது போன்ற வலி அல்லது வலியை உணர்வது, கண்களை அசைக்க இயலாத நிலை அல்லது உங்களுடைய பார்வையில் தெரியும் பொருள்கள் இரட்டையாக தெரிவது, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது, குறைந்த ரத்த அழுத்தம் அல்லது உயர் குருதி அழுத்தம் இருப்பது, தசைப்பிடிப்பு, வலி, இதயத்துடிப்பில் சமச்சீரற்ற தன்மை, சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டில் இயல்பற்ற நிலை, உங்கள் கால்கள் ஏற்படும் பலவீனம் உடலெங்கும் பரவுவது போன்ற உணர்வு, பேசுவதிலும், திட மற்றும் திரவ ஆகாரங்களை சாப்பிடும் பொழுது மெல்லுவதிலோ அல்லது விழுங்குவதிலோ சிரமம் ஏற்படுவது… போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு குய்லின் பார் சிண்ட்ரோம் எனப்படும் நரம்புத்தளர்ச்சி பாதிப்பிற்கு ஆளாகி இருக்கலாம் என்று கருதி, மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பரிசோதனையை செய்து, பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இத்தகைய அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் பாதிப்பு விரைவாக உடலெங்கும் பரவி பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
ஜிகா வைரஸ், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தகைய நரம்புத் தளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.
எம்முடைய மூளைப் பகுதியிலிருந்து கை மற்றும் கால்களில் உள்ள நரம்பு பகுதிகளுக்கு பாதுகாப்பு அரண் போல் ஒரு அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் சேதம் ஏற்படுவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் சிலருக்கு கைகால்களை தூக்கவோ அல்லது அசைக்கவோ இயலாது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, நாளடைவில் இயங்க முடியாத நிலை கூட உண்டாக கூடும்.
எலக்ட்ரோமயோகிராபி, நரம்பு செயல்பாட்டு திறன் பரிசோதனை ஆகிய பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
இதனை அடுத்து பிளாஸ்மாபெரிசிஸ் மற்றும் இம்யூனோகுளோபின் தெரபி ஆகிய சிகிச்சைகள் மூலம் இதிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம்.
டொக்டர் பாலசுப்ரமணியம்
தொகுப்பு அனுஷா.