விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மஹிந்தவினாலா? புதிய சிக்கலில் முன்னாள் மன்னன்!
அவர் தம் அரசியல் வெற்றிக்காக இருவகையான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றார். தம்மை தமிழ் மக்களிடையே நல்லவராகவும் சிங்கள மக்களிடையே சிங்கள மன்னனாகவும் பாவனை செய்து கொள்கின்றார்.
மஹிந்த அண்மையில் வெளிகம பிரதேசத்தில் உரை ஒன்றின் போது வடமாகாண முதலமைச்சர் ஊடாக நாட்டில் இனவாதம் தூண்டப்பட்டு மக்கள் வேறுபக்கங்களுக்கு திசை திருப்பப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட ஆதரவாளர்கள் அனைவரும் வடக்கு முதல்வருக்கு எதிரான கருத்துகளையே முன்வைத்து வந்தனர் குறிப்பாக அவருக்கு எதிராக கொச்சையான வார்த்தை பிரயோகங்களும் மஹிந்த தரப்பிடம் இருந்து வெளிவந்ததனையும் அவதானிக்க முடியுமானதாக இருந்தது.
இதன் பின்னர் திடீரென திசை திரும்பிய மஹிந்த அண்மையில் தமிழ் ஊடகவியலாளர்களிடம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல அவரை நான் ஓர் அரசியல் வாதியாகவே பார்க்கின்றேன் என பாராட்டும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இங்கு நோக்கப்பட வேண்டியது சிங்கள ஊடகங்களிடம் வடக்கு முதல்வரை இனவாதியாகவும், அவரது உரை மிகவும் பயங்கரமானது, இனங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் என்றும் கூறியவர் திடீரென மாறி பாராட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக வடக்கு முதல்வருக்கு எதிராக போராட்டங்களும், ஒட்டு மொத்த (மஹிந்த தரப்பு) தென்னிலங்கை அரசியல் தரப்பும் கோபமுற்ற வேளையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக வடக்கு முதல்வர் பகிரங்கமாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவமும் முதல்வருக்கு பாதுகாப்பும் வழங்க ஒத்துக்கொண்டது. இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்து விட்ட பின்னரே மஹிந்த தமிழ் ஊடகங்களிடம் முன்னர் கூறிய வார்த்தைகளுக்கு மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் இரு விதமாக நோக்கப்படுவதாக தென்னிலங்கை புத்தி ஜீவிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது வடக்கு முதல்வருக்கு மஹிந்த தரப்பினராலேயே உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம். அந்த விடயம் பகிரங்கமாவதற்கு முன்னர் வடக்கு முதல்வர் பற்றிய நல்ல விதமாக கருத்துகளை வெளிப்படுத்தி மஹிந்த தப்பிக் கொள்ளும் செயலாகவே மஹிந்தவின் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் நோக்கப்படுகின்றது.
அதே சமயம் தமிழ் மக்களுக்கு ஒரு கருத்தையும் சிங்கள மக்களுக்கு ஒரு கருத்தையும் வெளிப்படுத்தி தான் நினைக்கும் அரசியல் செல்வாக்கை சேகரிக்கும் செயலே இது எனவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் மஹிந்த மீண்டும் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள தமிழ் மக்களின் வாக்குகள் மிக அவசியம் என்பது கடந்த காலத்தில் அவர் பெற்றுக் கொண்ட முக்கிய அனுபவமாகவே திகழ்கின்றது என்பதும் உண்மையே.