நிலவும் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இந்தியாவில் இருந்து முதல் முறையாக உள்நாட்டு எரிவாயுவை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த வாரம் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கூட்டமொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது தமது நிறுவனம் தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தைப் பெற்றால், சந்தைத் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்யும் வகையில் விநியோகத்தை அதிகரிக்க முடியும் என்று லிட்ரோ அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் செயற்பாட்டை விரைவுபடுத்த இந்திய உயர்ஸ்தானிகரகம், துரிதமாக செயற்படுவதாக அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டார்.
இதன்படி கொள்முதல் செயல்முறை அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இது அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லிட்ரோ அதிகாரிகளின் தகவல்படி, எரிவாயு பற்றாக்குறை ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]