நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 4 ஆவது கட்ட கொவிட் -19 தடுப்பூசி அல்லது இரண்டாவது பூஸ்டர் டோஸ் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாவது பூஸ்டர் டோஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இரண்டாவது பூஸ்டர் டோஸ் 20-60 வயதுக்குட்பட்டவர்களுக்கு உகந்தது என்று அவர் மேலும் கூறினார்.
பைசர் தடுப்பூசியின் மீதமுள்ள 08 மில்லியன் டோஸ்களை 4 ஆவது கொவிட் – 19 தடுப்பூசியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரண்டாவது பூஸ்டர் டோஸுக்கு புதிதாக மருந்துகள் கொள்முதல் செய்யப்பட மாட்டாது என்று பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், அனைத்து வைத்திய நிபுணர்களும் வர்த்தக நாமங்களுக்கு பதிலாக பொதுவான பெயர்களுடன் மருந்துச்சீட்டுகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.
புற்றுநோய் வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை மற்றும் காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை ஆகியவை கடுமையான மருந்து தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.