ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இருக்கும் தங்கச்சிமடம் என்ற ஊரில் ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 தீர்த்தங்களில் ஒன்றான ‘வில்லூன்றி தீர்த்தம்’ இங்குதான் இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இருக்கிறது, தங்கச்சிமடம் என்ற ஊர். ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 தீர்த்தங்களில் ஒன்றான ‘வில்லூன்றி தீர்த்தம்’ இங்குதான் இருக்கிறது. இங்கே திரயம்பகேஸ்வரர் என்ற பெயரில் சிவன் சன்னிதி அமைந்திருக்கிறது.
இந்த இடத்தில் கடலுக்குள் அமைந்திருக்கும் வில்லூன்றி தீர்த்தம் என்னும் இந்த புனித நீரூற்று, பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது. சீதையை சிறைபிடித்துச் சென்ற ராவணனுடன் போரிட்டார், ராமபிரான். போரின் முடிவில் ராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு, இந்தப் பகுதிக்கு வந்தார். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது. உடனே ராமபிரான், தன்னுடைய கையில் இருந்த வில் ஒன்றை கடலின் ஒரு பகுதியில் ஊன்றினார். அதில் இருந்து நன்னீர் வெளிப்பட்டது.
அதை அருந்தி தாகத்தைத் தணித்தார், சீதாதேவி. ராமாயணக் காலத்தில் தோன்றிய அந்த புனித நீரூற்றுதான், ‘வில்லூன்றி தீர்த்தம்’ ஆகும். இந்த தீர்த்தம், கிணறு வடிவில் கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரம் கடலுக்குள் அமைந்திருக்கிறது. இதனை சென்றடைய நீண்ட பாலம் ஒன்று, கிணறோடு முடியும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.