சில இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்பி வருவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் மேற்படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்வியை கற்கின்றனர்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், குறித்த மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றனர்.
கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், சீனாவில் கல்வி நிலையங்கள் நேரடி வகுப்புக்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய மாணவர்களும் தங்கள் மேற் படிப்பை தொடர சீனாவுக்கு செல்ல விரும்புகிறார்கள்.
ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில், விமான போக்குவரத்தை சீனா நிறுத்தியுள்ளது.
அத்துடன் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இதனால், இந்திய மாணவர்கள் இணையத்தள வகுப்புகளில் தான் கல்வியை தொடர முடிகிறது.
இப்பிரச்சினையை சீன அரசின் கவனத்துக்கு இந்தியா எடுத்துச் சென்றது. இருந்தாலும், சீனா சற்று தாமதித்தது. இந்தநிலையில், திடீர் திருப்பமாக இந்திய மாணவர்கள் சீனாவுக்கு வந்து படிப்பைத் தொடர அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவிலுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:
இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனா வருவதற்கு சீனா உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.
சீனாவுக்கு திரும்பிய ஏனைய நாடுகளின் மாணவர்கள் பின்பற்றிய நடைமுறையையும், அனுபவத்தையும் இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
இந்திய மாணவர்கள் சீனாவுக்கு வருவதற்கான பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தியா செய்ய வேண்டியதெல்லாம், எந்தெந்த மாணவர்கள் உண்மையிலேயே அவசியம் சீனாவுக்கு திரும்ப வேண்டியவர்கள் என்ற பட்டியலை அளிப்பதுதான். அந்த மாணவர்களை நாங்கள் அனுமதிப்போம் எனத் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]