எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (30) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி மூன்றுவருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும் எமக்கான நீதியினை எந்த அரசாங்கமும் வழங்கவில்லை.
அரசு மீது நம்பிக்கை இழந்த நாம் சர்வதேசத்திடம் எமக்கான நீதியை வேண்டி தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.
எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை. எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம்.
எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு இனியாவது சர்வதேசம் முன்வர வேண்டும். என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, நிதி வேண்டாம் நீதியே வேண்டும், பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, அரசின் பொறுப்பற்ற பதில்களை கண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.