கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்தியாவிலுள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்ற வேளையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு 123 ரூபா கோடி மதிப்பில் உணவு, பால் மா , மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கிட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அனுமதி வழங்கிட மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா
இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஊடகவியலாளர்களிடம் பேசிய போது,
தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தமைக்கு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்.
இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து எவ்வகையான நடவடிக்கைகள் தேவை என்பதை அரசு பரிசீலனை நடத்திவருகிறது எனத் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]