இந்திய மத்திய அரசு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவி செய்யும் அதேநேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்து வருகின்றது.
இந்நிலையில், இதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இது குறித்து இந்திய மத்திய அரசுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் அதற்கு இதுவரை இந்திய மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.
இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு இந்திய மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்த அந்த தீர்மானம் வருமாறு:
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது.
இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
எனினும் இது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் உரையாற்றினர். அதன் பிறகு அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]