ராஷித் கானும் ராஹுல் தெவாட்டியாவும் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான அதிரடி துடுப்பாட்டங்களின் பலனாக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியின் கடைசிப் பந்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 196 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
8 போட்டிகளில் 7ஆவது வெற்றியை ஈட்டிய குஜராத் டைட்டன்ஸ், அணிகள் நிலையில் 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை அடைந்துள்ளது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியின் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிபெறுவதற்கு மேலும் 22 ஓட்டங்கள் தெவைப்பட்டது. மார்க்கோ வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தெவாட்டியா (6, 1) 7 ஓட்டங்களைப் பெற்றார்.
அடுத்த 4 பந்துகளில் ராஷித் கான் 3 சிக்ஸ்களை (6, 0, 6, 6) விளாசி குஜராத்தின் வெற்றியை உறுதி செய்தார்.
தெவாட்டியா 21 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ் அடங்கலாக 40 ஓட்டங்களுடனும் ராஷித் கான் 11 பந்துகளில் 4 சிக்ஸ்கள் அடங்கலாக 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 24 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இவர்களை விட ஆரம்ப வீரர்களான ரிதிமான் சஹா 38 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 68 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (10), டேவிட் மில்லர் (17) ஆகிய இருவரும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்து ஆட்டமிழந்தனர்.
குஜராத் அணியின் 5 விக்கெட்களையும் உம்ரன் மாலிக் கைப்பற்றினார். அவர் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்தார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (5), ராகுல் த்ரிபதி (16) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 5 ஓவர்கள் நிறைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும் ஆரம்ப வீரர் அபிஷேக் ஷர்மாவும் ஏய்டன் மார்க்ராமும் 3ஆவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
அபிஷேக் ஷர்மா 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் உட்பட 4 விக்கெட்கள் 22 ஒட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.
நிக்கலஸ் பூரன் (3), ஏய்டன் மார்க்ராம் (56), வொஷிங்டன் சுந்தர் (3) ஆகியோரே சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தவர்களாவர்.
எனினும் ஷஷான்க் சிங் 6 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.
ஷஷான்க் சிங், மார்க்கோ ஜென்சென் (8 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 11 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 195 ஓட்டங்களாக உயர்த்தினர்.
பந்துவீச்சில் மொஹமத் ஷமி 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.