இராத்திரி முழுக்க நித்திரை இல்லை
வெக்கைநெடி ஒருபக்கம்
நுளம்புக்கடி இன்னொருபக்கம்
உருண்டு புரண்டு பார்க்கிறேன்…
முன்பெல்லாம் வேலி முழுவதும்
கிழுவை மரங்களும்; சீமை
பூவரசு மரங்களும்தான் வரிசைகட்டி
பச்சைபசேல் பரப்பி குளிர்மை தெளிக்கும்
விதம்விதமான பூமரங்களும்
வேம்பு, மா, வாழை மரங்களும்
நிறைந்தே அழகு செய்யும்
ஒற்றை மரமாக
வீட்டுவளவு மூலையிலே ஒரு வேம்பும்…
இப்பவெல்லாம்
வெளிநாட்டு நாகரிக மோகத்திலே
மரங்களை வெட்டி வீசி எறிந்துவிட்டு
மின் குளிர் அறையில் விறைத்து
நடுநடுங்கிக்கொண்டு இருப்பதை
நவநாகரிகமென
போர்த்துப்பழகிவிட்டோமே..!
மின்சாரம் இல்லாத நேரத்தில்தான்
வேர்த்து விறுவிறுக்க
மரத்தின் அருமையை உணர்கிறோம்
வீட்டு முற்றத்தில் நிற்கும்
ஒரேயொரு மாமரத்தை தேடி
ஓடி போகின்றோமே..!
மதிலோரமாக
உள் வரிசையில் எங்கும்
பூவரசு, கிழுவை நட்டு
ஓலையில்லா வேலி ஒன்று அமைக்க
திட்டம் போட்டார் அம்மையா!
நிழல்மரவள்ளி சீமைமரம்
எங்காவது நின்றால், அவற்றையும்
கொண்டுவந்து நட்டு வையடா என்று
மூத்தமாமாவிடம்
சொல்லி புலம்புகிறார் அம்மம்மா!
தேமா, செவ்வரத்தை பூமரங்களும்
துளசி, வேம்பும் கூடவே
கற்பூரவள்ளிச்செடியும் நட்டுவிட
புறுபுறுத்து சொல்லிக்கொண்டிருந்தார்
அம்மம்மாவின் அக்கா, பெரியம்மம்மா..!
-சமரபாகு சீனா உதயகுமார்