இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவராக இருக்க வேண்டும். அதே போன்று அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் தலைமை வகிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வினை முன்வைத்து சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பரிந்துரைகளில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவராக இருக்க வேண்டும். அதே போன்று அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் தலைமை வகிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 42 ஆவது பிரிவின் படி நெருக்கடியான தருணத்தில் ஸ்தாபிக்கப்படும் அமைச்சரவை 12 பேருக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த அமைச்சரவை நிறைவேற்றதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் பிரேரணைகளை கொண்டு வர வேண்டும். இது நாட்டின் எதிர்கால நலன்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
தேசிய கொள்கைகளுக்கான பேரவையின் செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும். ஜனநாயக வரையறைக்குள் நாட்டின் எதிர்கால கொள்கை வகுப்பை இந்த பேரவை ஊடாக முன்னெடுக்க வேண்டும்.
அதேபோன்று இந்த பேரவையானது அமைச்சரவை மற்றும் அரச நிறுவனங்களுடன் தொடர்புபட்டு செயற்பட வேண்டும் என்பதோடு, அவ்வாறான தொடர்புகளின் ஊடாக கண்டறியப்படும் விடயங்களை நன்கு ஆராய்ந்து நீண்ட கால கொள்கையை வகுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.