நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார பிரிவு பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் 3 நாட்களுக்குள் உடனடியாக தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
மேலும் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தவறும் பட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என சுகாதார தொழிற்சங்களின் ஒருங்கிணைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருதானை – சுகாதார தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய குறிப்பிடுகையில்,
நாட்டில் சுகாதார துறை பாரியளவிலான நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வினைத்திறனற்ற முகாமைத்துவம் மற்றும் முறையான திட்டங்கள் இன்மையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் 250 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகள், வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு தேவையான பரிசோதனை கருவிகள், கர்ப்பிணி பெண்களுக்கான விற்றமின் மருந்துகள், மந்தப்போசனையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மருந்து வகைகள் என்பனவற்றில் பெருமளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ பொதிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண பொதிகள் தற்போது வழங்கப்படுவதில்லை . எதிர்வரும் நாட்களில் நாட்டில் சுகாதார பிரிவில் நிலவிவரும் நெருக்கடி நிலைமை மேலும் தீவிரமடையும்.
எனவே வைத்தியாசாலைக்கு தேவையான மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள், சுகாராத பிரிவு ஊழியர்களுக்கான எரிபொருள் தேவையை பெற்றுக்கொள்ளல், குறிப்பிட்ட சில வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு வசதிகளை பெற்று கொடுத்தல், நாட்டின் சுகாதார பிரிவு வினைத்திறனாக மேற்கொள்ள முறையான முகாமைத்துவம் செய்தல் போன்ற விடயங்களுக்கு உடனடி தீர்வு வேண்டும்.
இது தொடர்பாக அரசாங்கம் முறையான தீர்வை 3 நாட்களுக்குள் பெற்று தர வேண்டும் . அவ்வாறு தீர்வுகள் கிடைக்கவில்லை என்றால் நாடு தழுவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றார்.