01.
வயிற்றிலடிக்கிற போது
ஒரு கொடிப் போராட்டமும்
ஒரு எதிர்ப்புச் சுலோகமும்
ஒரு பெரும் புரட்சியை
எவ்வாறு நிகழ்த்தும்!
ஒரு துண்டு பாணும்
ஒரு பால்மா பையும்
ஒரு கலன் எரிபொருளும்
இன்னும்
மின்வெட்டும்….
அதை எவ்வாறு நிகழ்த்தும்!
பசியின் நெருப்பிலிருந்து
புரட்சியின் முதல் பொறி
பற்றுகிறதெனின்…
உண்டாறும் காலம் வருகையில்
அதன் சுவாலை என்னவாகும்!
ஒரு புரட்சியை நிகழ்த்தும்
அதிகாரக் கதிரையின் கால்களை
விலை ஏற்றம் அசைக்கும்
என்ற நம்பிக்கையை
எங்கிருந்து பெறுவேன்!
‘எதிர்’ என்றொரு சொல்லை
எங்கு நடலாம்?
எவ்வாறு வளர்க்கலாம்?
02.
கடலருகில் எழும்
எதிர்ப்புச் சிறு குடில்கள்
அரச மாளிகையை
விழுங்கத் துடிக்கின்றன…
இரும்பாலும்
இறுகிய செங்கல்லாலும்
பெருஞ் சுவராய்க் கட்டிய
மாளிகையை,
மழை கழுவும் துணிக் குடில்கள் அச்சுறுத்துகின்றன.
மாளிகைச் சுவர்களில்
பீதி பொங்கி வழிகிறது.
பசியின் கரங்கள்
பறித்துண்ணுமோ எனும் அச்சத்தில்
அதன் ஓரங்களில்
உள்ளிருக்கும் இரும்புகள்
துருப்பிடிக்கின்றன.
சிறு குடில் பசியால் உண்டானது.
பசியோ மாளிகையால் உண்டானது.
எனின்,
சிறு குடில் பசியாற
மாளிகையை விழுங்குமன்றோ!
03.
ஒரு கடற்கரையை
புரட்சி அலைகள்
ஆர்ப்பரிக்கக் காண்பது
எவ்வளவு மேலானது.
உயரும் குரல்களின்
கோபத் தழலை
உப்புக் காற்றுச்
சுமந்தெழுகிறது.
குரல்கள்
உயர உயர எழுகின்றன.
கொடிகளைத் தழுவி,
கோட்டையின் முகடுகளை முட்டி,
முகிலைத் தொட்டு,
மேலெழுந்து,
விரிந்து,
வானத்தை இடித்து,
சூரியனைக் கழற்றி வருகின்றன.
இரவில் மழை பெய்கிறது.
கூடாரங்களும்
விரித்த புத்கங்களும்
வீசிப் பறந்த கொடிகளும்
நனையுமா என்ன!
பிடித்து உயர்த்திய
சுலோக அட்டையின்
சிவப்பு எழுத்துக்கள் கரையாதிருக்கின்றன.
சூரியன்
நிலத்துக்கு வந்திருக்கிறது.
04.
உன் நாவை
வாழ்த்துகிறேன்…
வற்றாத பெரும் பசியில்
என் மொழியிலும்
நீ கீதம் இசைப்பதால்.
என் நாவையும் வாழ்த்துகிறேன்…
உனது பசிப் போரில்,
உன் குரலோடு பின்னி
உன் மொழியிலும்
கீதம் இசைப்பதால்.
ஒரே உணர்வோடு எழும்
ஓர் இசையில்
காலிமுகத்தில்
காற்று உயிர்க்கவில்லையா?
கடல் அலைகள்
நுரை தெளித்துப் பாடவில்லையா?
புரட்சி மலர்
மாவுக்கும் பாணுக்கும்
மர்வதில்லை,
என் அன்பனே…!
அது மலர்கிறது…
மொழி புரியா ஓர் இசையில்
நீயும் நானும் இசைக்கும்
இரு மொழியின்
ஒரு கீத நிழலில்.