சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலால் ஊரடங்கு விதித்த பின்னர் முதன்முறையாக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உகான் நகரில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அந்த நாடு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக ஒமிக்ரோன் பாதிப்புகள் அதிகளவில் பரவலை ஏற்படுத்தி வருகின்றன.
அந்நாட்டின் பொருளாதார மையமாக திகழ கூடிய ஷங்காய் நகரில், ஒமிக்ரோன் வகை கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. 2.60 கோடி மக்கள் வசிக்க கூடிய இந்நகரில், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா அலை எழுச்சியடைந்து உள்ளது.
இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வீடுகளுக்குள் மக்கள் முடங்கி உள்ளனர்.
ஆனாலும் அங்கு உள்ளூர் தொற்றாக நேற்று முன்தினம் மட்டும் 3,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 21 ஆயிரத்து 500 உள்ளூர்வாசிகளுக்கு அறிகுறியற்ற பாதிப்பு இருப்பதாக ஷங்காய் நகர சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஷங்காய் நகரில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பின்னர், முதன்முறையாக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன என சீனாவின் உள்ளூர் ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 89 முதல் 91 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்புகள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த சூழலில், ஷங்காய் நகரில் 2,417 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அறிகுறியற்ற நிலையில் தொற்று பாதிக்கப்பட்ட 19 ஆயிரத்து 831 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர் என்றும் குளோபல் டைம்ஸ் தெரிவிக்கின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]