அரசாங்கத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடல் – ‘கோட்டா கோ கம’ பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக போராட்டக்காரர்களால் புதிதாக இணையக்கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம், பல்வேறுபட்ட புத்தாக்க சிந்தனைகளுடன் மிகவேகமாக விரிவடைந்துவருகின்றது.
அந்தவகையில் ‘கோட்டா கோ கம’ எனப்பெயரிடப்பட்டுள்ள போராட்டம் நடைபெறும் இடத்தில் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வலையமைப்பு வசதியை வழங்கக்கூடியவகையில் இணையக்கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிராகக் கடந்த சனிக்கிழமை காலிமுகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அப்பகுதியில் இணைய வலையமைப்பு வசதிகளைச் செயலிழக்கச்செய்யும் வகையிலான கருவியொன்று ஜனாதிபதி செயலக முன்றலில் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது.
அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அதுகுறித்து உடனுக்குடன் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையோ, போராட்டத்துடன் தொடர்புடைய புகைப்படங்களைப் பகிர்வதையோ, அவற்றின் மூலம் உத்வேகமடைந்து மேலும் பலர் அப்போராட்டத்தில் கலந்துகொள்வதையோ தடுக்கும் நோக்கிலேயே அக்கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் பரவலாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அதுமாத்திரமன்றி காலிமுகத்திடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அப்பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையிலேயே காணப்படுவதாகக் கருத்து வெளியிட்டுவந்தமையினையும் அவதானிக்கமுடிந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே அப்பகுதியில் இணைய வலையமைப்பு வசதியைப் பெறுவதில் காணப்படும் சிக்கலை முறியடித்து, போராட்டக்காரர்கள் இணைய வசதியைத் தொடர்ந்தும் பெறக்கூடிய வகையில் இந்த இணையக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.