போர்ட் எலிஸபெத் சென் ஜோர்ஜஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது தடவையாக கடைசி இன்னிங்ஸில் 2 பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்தி பங்களாதேஷை 80 ஓட்டங்களுக்கு சுருட்டிய தென் ஆபிரிக்கா 332 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பங்களாதேஷின் 2ஆவது இன்னிங்ஸில் 2 பந்துவீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்தி பங்களாதேஷை 53 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி 220 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கேஷவ் மகாராஜ், சைமன் ஹார்மர் ஆகிய இருவரே பந்துவீசினர்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் மத்தியஸ்தர்களின் தீர்ப்புகள் குறித்தும் தென் ஆபிரிக்கர்களின் வசைபாடுகள் குறித்தும் ஐசிசியிடம் முறையிட்ட பங்களாதேஷ், இரண்டாவது டெஸ்டிலும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்தது.
முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்ளாதேஷின் 2ஆவது இன்னிங்ஸில் கேஷவ் மகாராஜ் (10 ஓவர்களில் 32 – 7 விக்.), சைமன் ஹார்மர் (9 ஓவர்களில் 21 – 3 விக்.) ஆகிய இருவர் மாத்திரம் பந்து வீசி 10 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இப்போது 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேஷவ் மகாராஜ் (12 ஓவர்களில் 40 – 7 விக்.), சைமன் ஹார்மர் (11.3 ஓவர்களில் 34 – 3 விக்.) ஆகிய இருவர் மாத்திரம் பந்துவீசி இரண்டாவது தடவையாகவும் 10 விக்கெட்களை பகிர்ந்த அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த மைல்கல் சாதனை 134 வருடஙகளின் பின்னர் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
சிட்னியில் 1887ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 1ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா பயன்படுத்திய சார்ளி டேர்னர் (11 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 18 ஓவர்களில் 15 – 6 விக்.), ஜோன் ஜேம்ஸ் பெரிஸ் (17.3 ஓவர்களில் 27 – 4 விக்.) ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்கள் மாத்திரம் 10 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தனர்.
ஒரு வருடம் கழித்து 1888ஆம் ஆண்டு லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை மாதம் நடைபெற்ற 1ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் இதே இரண்டு பந்துவீச்சளார்களை மாத்திரம் பயன்படுத்திய அவுஸ்திரேலியா 10 விக்கெட்களையும் வீழச் செய்திருந்தது.
அப் போட்டியில் சார்ளி டேர்னர் (24 ஓவர்களில் 36 – 5 விக்.), ஜோன் ஜேம்ஸ் பெரிஸ் 23 ஓவர்களில் 26 – 5 விக்.) ஆகிய இருவரும் 10 விக்கெட்களை தம்மிடையே பகிர்ந்துகொண்டிருந்தனர்.
இந்த ஜோடியினரே இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த சாதனையை நிலைநாட்டிய முதல் ஜோடியாவர்.
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 தடவைகள் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக அதிக தடவைகள் 7 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஹியூ டேபீல்டுக்கு (4 தடவைகள்) அடுத்ததாக 2ஆவது வீரராக மகாராஜ் இடம்பெறுகிறார்.
அத்துடன் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தலா 7 விக்கெட்களை வீழ்த்தியோரில் டேபீல்டுக்கு அடுத்ததாக மகாராஜ் இடம்பெறுகிறார்.
மேலும் இரண்டாவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் 7ஆவது விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் தனது 37ஆவது போட்டியில் 150ஆவது டெஸ்ட் விக்கெட்டை மகாராஜ் பூர்த்தி செய்தார்.
தென் ஆபிரிக்க சுழல்பந்துவீச்சாளர்களில் மறைந்த ஹியூ டேபீல்டின் பெயர் 170 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கின்றது.
பங்களாதேஷுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஷவ் மகாராஜ், சைமன் ஹார்மர் ஆகிய இருவரும் பந்துவீச்சில் அபரிமிதமாக பிரகாசித்த அதேவேளை, துடுப்பாட்டத்தில் மகாராஜ் உட்பட நால்வர் அரைச் சதங்களை முதல் இன்னிங்ஸில் குவித்திருந்தனர்.
அத்துடன் தென் ஆபிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் இருந்த 11ஆம் இலக்க வீரர் டுவேன் ஒலிவரைத் தவிர்ந்த மற்றைய 10 துடுப்பாட்ட வீரர்களும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
அவர்களில் முதல் 9 பேர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருந்தனர்.
2ஆவது டெஸ்ட் எண்ணிக்கை சுருக்கம்
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்னிங்ஸ் 453 (கேஷவ் மகாராஜ் 84, டீன் எல்கர் 70, டெம்பா பவுமா 67, கீகன் பீட்டர்சன் 64, தய்ஜுல் இஸ்லாம் 135 – 6 விக்.)
பங்களாதேஷ் 1ஆவது இன்: 217 (முஷ்பிக்குர் ரஹிம் 51, தமிம் இக்பால் 47, யாசிர் அலி 46, நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 33, வியான் முல்டர் 25 – 3 விக்., சைமன் ஹார்மர் 39 – 3 விக்., கேஷவ் மகாராஜ் 57 – 2 விக்.)
தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 176 – 6 விக். டிக்ளயார்ட் (சரெல் ஏர்வி 41, கய்ல் வெரின் 39, டெம்பா பவுமா 30, தய்ஜுல் இஸ்லாம் 67 – 3 விக்., மெஹிதி ஹசன் மிராஸ் 34 – 2 விக்.)
பங்களதேஷ் 2ஆவது இன்: 80 (லிட்டன் தாஸ் 27, மெஹிதி ஹசன் மிராஸ் 20, கேஷ்வ் மகாராஜ் 40 – 7 விக்., சைமன் ஹார்மர் 34 – 3 விக்.)
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: கேஷவ் மகாராஜ்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]