பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் நாட்டின் எந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் தனது உரையில் பல்வேறு விடயங்களை முன்வைத்து நாட்டின் உண்மையாள பிரச்சினைகள் தொடர்பான மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசைத் திருப்ப முயற்சித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி பதில் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
எனினும் 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் இருப்பதாக கூறிய பிரதமரின் உரையில் நாடு தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அவர் கீழ் மட்டத்தில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் நிலைமைக்கு சென்றார்.
60 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருப்பதாக கூறினாலும் அவரிடம் அந்த முதிர்ச்சி இல்லாததையே முழு நாடும் நேற்று கண்டது. அவரது உரையில் போர், கொரோனா,88,89 ஆம் ஆண்டுகளில் நடந்த பிரச்சினைகள் சம்பந்தமான விடயங்களே இருந்தன.
போர் முடிவுக்கு வந்து தற்போது 13 ஆண்டுகள் கடந்து விட்டது. போர் காலத்தில் இருக்காத பிரச்சினைகள் தற்போது உள்ளன. போர் நடைபெற்ற காலத்தில் நாட்டில், எரிபொருள், எரிவாயு, பால் வரிசைகள், மின் துண்டிப்பு என்பது இருக்கவில்லை.
போர் காலத்தில் எதிர்கொள்ளாத பிரச்சினைகளை மக்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். ஆட்சியாளர்களின் தூரநோக்கமற்ற செயல்கள் காரணமாகவே மக்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன்.
பிரதமர் நேற்று தனது உரையில் ஜனாதிபதியான தனது தம்பியை காப்பாற்ற மறைமுகமான அச்சுறுத்தலை விடுத்தார். பொய்யான பூச்சாண்டிகளை காட்டினார்.
பொய்யான பூச்சாண்டியை காட்டி, பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காது மறைக்க பார்க்கின்றனர். இந்த விளையாட்டை தொடர்ந்தும் மேற்கொள்ள தயாராக வேண்டாம் என அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.
அத்துடன் இணைந்து நாட்டைகட்டியெழுப்பு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததாக பிரதமர் கூறினார். இவர்கள் அண்ணன், தம்பிகள், பெரியப்பாவின் பிள்ளைகள், சித்தப்பாமார், சின்னம்மாவின் புதல்வர்கள் இணைந்து எமது நாட்டில் கொள்ளையடித்து, ஊழல், மோசடிகளை செய்து நாசப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக நலிவடைய செய்தனர்.
திருடர்கள் அனைவரையும் நீதிமன்றங்கள் ஊடாக விடுதலை செய்துக்கொண்டனர். சீனாவில் இருந்து குப்பைகளை ஏற்றிய கப்பல் வந்து அந்த கப்பலுக்கு 6.9 மில்லியன் டொலர்களை செலுத்தும் போது, பயப்பட வேண்டாம் இந்த கப்பலுக்கு பதிலாக வேறு கப்பல் வரும் என மகிந்தானந்த போன்றவர்கள் கூறினார்கள்.
இது இழப்பீடு அல்ல, அதற்கு பதிலாக பசளையை ஏற்றிய புதிய கப்பல் அவரும் என்றனர். அந்த கப்பல் இன்று வரை வரவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகவே நாடு பொருளாதார ரீதியாக சரிவடைந்தது.
தாம் கொள்ளையிட்டு நலிவடைய செய்த நாட்டை கட்டியெழுப்பு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஒரு குடும்பம் வீழ்த்திய நாட்டை, அந்த குடும்பத்துடன் இணைந்து கட்டியெழுப்ப முடியுமா, முடியாது எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.