ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? பதவி விலகியிருந்தால் அமைச்சு வாகனங்களை எப்படி பயன்படுத்த முடியுமென்பது தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (8) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சமிந்த விஜேசிறி ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி, அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் பொய் கூறுகின்றார். அமைச்சர்கள் பதவி விலகினார்களா இல்லையா என்பது தொடர்பில் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த மரிக்கார் எம்.பி.ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி, அமைச்சர்கள் பதவி விலகியிருந்தால் எப்படி அமைச்சு வாகனங்களில் வர முடியும்? அமைச்சு வீடுகளில் எப்படி தொடர்ந்தும் தங்கியிருக்க முடியும்? அமைச்சர் பதவியிலிருந்து விலகினால் அவரது உத்தியோகஸ்தர்களும் விலக வேண்டும்.
ஆனால் அப்படி யாரும் விலகவில்லை. அத்துடன் இந்த சபையில் கூட அமைச்சர்களுக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் தான் இப்போதும் அவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அமைச்சர்கள் உண்மையில் பதவி விலகியிருந்தால் அதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பில் அரச தரப்பு எம்.பி. யான காஞ்சன விஜேசேகர கூறுகையில், புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளது என்றார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இந்த ஒழுங்குப்பிரச்சினைகள் தொடர்பில் அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்சன் பெர்னாண்டோ கூறுகையில்,
அமைச்சர்கள் இராஜிநாமா செய்யவில்லை அது தொடர்பில் அரச தரப்பினர் பொய்களைக் கூறி வருகின்றனர் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.அமைச்சரவை கலைக்கப்பட்டு அமைச்சர்கள் இராஜிநாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே முதலில் நீங்கள் அதனை பார்வையிட வேண்டும்.
அமைச்சர்கள் வழமைபோன்று அமைச்சர்களுக்கான ஆசனத்தில் அமர்ந்தி ருப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் சபாநாயகரின் ஏற்பாட்டில் அவர்கள் உரிய ஆசனங்களில் அமர்வர். அதுவரை அவர்கள் தத்தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.
எவ்வாறெனினும் பதவி விலகிய பின்னும் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், அமைச்சர்களுக்கான வாகனங்களை அவர்கள் உபயோகப் படுத்தினால் அது தொடர்பில் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]