தடுப்பு சுவாராய் நின்ற ரஹானே- புஜாரா: சரிவில் இருந்து மீண்டது இந்தியா
இதில் இந்திய அணியில் லோகேஷ் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவானும், உமேஷ் யாதவுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கம்பீருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இதன் படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் (1), முரளி விஜய் (9) ஏமாற்றினர். இதையடுத்து புஜாரா- அணித்தலைவர் கோஹ்லி இணைந்தார்.
ஆனால், 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் கோஹ்லி ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 46 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.
இதன் பின்னர் 4வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 141 ஓட்டங்கள் குவித்தது. புஜாரா 87 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோஹித் சர்மா (2) நிலைக்கவில்லை. ரஹானே 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அஸ்வின் (26) சிறப்பாக ஆடினார். பின்னர் சகாவுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.
இந்திய அணி 86 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் எடுத்திருந்த போது வெளிச்சம் குறைவின் காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.
சகா (14), ஜடேஜா (0) களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.