இங்கிலாந்துக்கு எதிராக கிரனெடா, சென். ஜோர்ஜ் தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நிறைவுக்கு வந்த கடைசி டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
இந்தத் தொடர் வெற்றியானது மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தமட்டில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இங்கிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 1968க்குப் பின்னர் ஒரே ஒரு தடவை மாத்திரம் டெஸ்ட் போட்டி ஒன்றில் (2004இல்) மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைந்துள்ளது. அதன் பின்னர் தனது சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடையாமல் இருந்துவருகின்றது.
கிரனெடாவில் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டதும் நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்ததுமான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜொஷுவா டா சில்வா குவித்த சதம், கய்ல் மேயர்ஸ் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் பெரும் பங்காற்றின.
போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வெற்றிக்கு தெவைப்பட்ட 28 ஓட்டங்களை 4.5 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது.
முன்னதாக தனது 2ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை தொடர்ந்து இங்கிலாந்து, 10.2 ஓவர்களில் மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்கள் சேர்ந்த நிலையில் கடைசி 2 விக்கெட்களை இழந்தது.
கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிய இங்கிலாந்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 324 ஓட்டங்களையே பெற்றது.
முதல் இன்னிங்ஸில் கடைநிலை துடுப்பாட்ட வீரர்களான 10ஆம் இலக்க வீரர் ஜெக் லீச், 11ஆம் இலக்க வீரர் சக்கிப் மஹ்மூத் ஆகிய இருவரும் 10ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 90 ஓட்டங்களின் உதவியுடனேயே இங்கிலாந்து 204 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளும் முதலாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும் ஜொஷுவா டா சில்வா குவித்த சதம், பின்வரிசை வீரர்களான அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச் ஆகியோரின் அதிகபட்ச பங்களிப்புகள் ஆகியவற்றுடன் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 93 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை அடைந்தது.
முதல் இன்னிங்ஸைவிட 2ஆவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் பெரும் சரிவு கண்ட இங்கிலாந்தினால் 120 ஓட்டங்களையே பெறக்கூடியதாக இருந்தது.
கய்ல் மேயர்ஸ் 9 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 17 ஓவர்கள் பந்துவீசி 18 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்துக்கு பெரும் சோதனையைக் கொடுத்தார்.
இங்கிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் அலெக்ஸ் லீஸ், ஜொனி பெயார்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
எண்ணிக்கை சுருக்கம்
இங்கிலாந்து 1ஆவது இன்: 204 (சக்கிப் மஹ்மூத் 49, ஜெக் லீச் 41 ஆ.இ., அலெக்ஸ் லீஸ் 31, ஜேடன் சீல்ஸ் 40 – 3 விக்., கய்ல் மேயர்ஸ் 13 – 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 297 (ஜொஷுவா டா சில்வா 100 ஆ.இ., ஜோன் கெம்பல் 35, கய்ல் மேயர்ஸ் 28, அல்ஸாரி ஜோசப் 28, கெமர் ரோச் 25, கிறிஸ் வோக்ஸ் 59 – 3 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: 120 (அலெக்ஸ் லீஸ் 31, ஜொனி பெயார்ஸ்டோவ் 22, கிறிஸ் வோக்ஸ் 19, கய்ல் மேயர்ஸ் 18 – 5 விக்,, கெமர் ரோச் 10 – 2 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 28) 28 – 0
ஆட்டநாயகன்: ஜொஷுவா டா சில்வா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]