ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அரசாங்கம் முறையாக செயற்படாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கிறங்க நேரிடும். எதிர்வரும் 31 ஆம் திகதி மகாசங்கத்தினரை ஒன்றிணைந்து உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிறந்த நோக்கத்திற்காக ஆட்சிமாற்றத்தில் முன்னின்று செயற்பட்டோம்.அரசாங்கத்தை விமர்சிக்காதவர்கள் உள்ளவர் வீட்டில் இருந்து ஒரு குவளை தண்ணீர் பெற்றுக்கொள்வது தற்போது ஆச்சரியமாகவுள்ளது அந்தளவிற்கு முழு நாட்டு மக்களும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது. அவரை 6 மாத காலத்திற்கு அமைச்சு பதவியில் இருந்து விலக்கி வைக்குமாறு ஏற்கெனவே வலியுறுத்தினோம். ஒன்று அவரை பதவி நீக்க வேண்டும் அல்லது அவருக்கு பிறிதொரு அமைச்சு பதவியினை வழங்க வேண்டும்.
அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்படாவிடின் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க நேரிடும்.நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை குறித்து எதிர்வரும் 31ஆம் திகதி அபயராம விகாரையில் சகல மகாசங்கத்தினரையும் ஒன்றினைத்து விசேட ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளோம்.
மகாசங்கத்தினரும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து அதிருப்தியடைந்துள்ளார்கள். 31ஆம் திகதி எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பல விடயங்களை பகிரங்கப்படுத்துவோம்.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறந்த தீர்மானங்களை முன்னெடுப்போம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]