இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள எடின்பரோ இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டித் தொடர் மற்றும் கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடர் நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டித் தொடரில் இலங்கை ஸ்குவாஷ் தரவரிசையில் முன்னணி வகிக்கும் வீர, வீராங்கனைகள் பலரும் இப்போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாகும். இந்த திறந்த ஸ்குவாஷ் போட்டியானது ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்படவுள்ளது.
அத்துடன், கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடரானது 9, 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கிடையில் நடத்தப்படவுள்ளன.
எடின்பரோவின் பூர்ண அனுசரணையுடன் நடத்தப்படும் இப்போட்டித் தொடர்களானது, மத்தேகொடவிலுள்ள இராணுவ ஸ்குவாஷ் விளையாட்டரங்கிலும், கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் அமைந்துள்ள ஸ்குவாஷ் விளையாட்டரங்கிலும் எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் இறுதிப் போட்டிகள் மத்தேகொட இராணுவ ஸ்குவாஷ் விளையாட்டரங்கில் நடத்தப்படும்.
இந்த போட்டிகள் நடத்தப்படுவது தொடர்பான அறிமுக நிகழ்வு நேற்று (24) மாலை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்திலுள்ள n கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவர் கொஹோன்கே,
“ஸ்குவாஷ் விளையாட்டை இலங்கையில் முன்னேற்றிச் செல்வதற்காக எடின்பரோ நிறுவனம் உதவ முன்வந்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஸ்குவாஷ் விளையாட்டை நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் கொண்டு செல்வதற்கும், ஸ்குவாஷ் விளையாட்டை முன்னேற்றி செல்வதற்கும் எடின்பரோ நிறுவனத்துடன் நீண்ட காலத்துடன் இணைந்து பயணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் ” என்றார்.
இதன்போது எடின்பரோ நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளர் ஆர்.பி.எம். ஸல்மி உரையாற்றுகையில்,
“முன்னேற்றமடைந்துவரும் எந்தவொரு விளையாட்டையும் முன்னோக்கிப் பயணிப்பதற்கு பலமிக்க அனுசரணையாளர் ஒருவர் தேவை என்றபடியால், நாம் இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்திற்கு கைகொடுக்க தீர்மானித்தோம்.
இலங்கையில் ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் முன்னேற்றகரமாக எடுத்துச் செல்ல முடியும் என்பது எமது நிறுனத்தின் நம்பிக்கையாகும். ஆகவே, இந்த விளையாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு நாம் தொடர்ச்சியாக அனுசரணை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
கொவிட் 19 சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய இப்போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும் என போட்டி ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]