பங்களாதேஷுக்கு எதிராக வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்த்தவாறு அவுஸ்திரேலியா வெற்றிபெற்றபோதிலும் அந்த வெற்றி இலகுவாக அமையவில்லை.
ஆறு தடவைகள் உலக சம்பியனானதும் இந்த வருடம் சம்பியனாவதற்கு அனுகூலமானதுமான அணியாக அவுஸ்திரேலியா கருதப்படுகின்றது. ஆனால், உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக பங்களாதேஷ் களம் இறங்கியது.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா 347 போட்டி அனுபவம் கொண்டிருந்ததுடன் பங்களாதேஷ் 47 போட்டிகளிலேயே விளையாடியிருந்தது.
8 அணிகள் பங்குபற்றும் 12 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் தோல்வி அடையாத அணியாக அவுஸ்திரேலியா திகழ்கின்றது.
பங்களாதேஷ் அணிகள் நிலையில் 7ஆம் இடத்தில் இருக்கின்றது.
இத்தகைய வரலாறுகளுடயேயே அவுஸ்திரேலியாவும் பங்காதேஷும் இன்றைய போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடின.
இதன் காரணமாக அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிபெறும் என்ற பொதுவான அபிப்பிராயம் நிலவியது ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு அது இலகுவாக அமையவில்லை.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு பங்களாதேஷ் ஈடுகொடுக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பங்களாதேஷின் சுழல்பந்துவீச்சாளர் சல்மா காத்துன் உட்பட ஏனையவர்களின் பந்துவீச்சில் அவுஸ்திரேலியா தடுமாற்றம் அடைந்தது.
அலிசா ஹலீ (15), அணித் தலைவி மெக் லெனிங் (0), ரஷேல் ஹேய்ன்ஸ் (7), தஹிலா மெக்ரா (3), ஏஷ்லி கார்ட்னர் (13) ஆகிய 5 முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகள் 18 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் பெத் மூனி அபார அரைச் சதம் குவித்து அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தார்.
அலிசா ஹலீ (15), அணித் தலைவி மெக் லெனிங் (0), ரஷேல் ஹேய்ன்ஸ் (7), தஹிலா மெக்ரா (3), ஏஷ்லி கார்ட்னர் (13) ஆகிய 5 முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகள் 18 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தது.
மழை காரணமாக தாமதித்து ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டி அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 43 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் லதா மொண்டால் 33 ஓட்டங்களையும் ஷார்மின் அக்தர் 24 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஜெசிக்கா ஜோனாசென் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷ்லி கார்ட்னர் 23 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 32.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
18ஆவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவுக்கு பெத் மூனி, அனாபெல் சதர்லண்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
பெத் மூனி 66 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் சல்மா காத்துன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இந்த போட்டி முடிவுடன் தனது 7 போட்டிகளிலும் வெற்றியீட்டி 14 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தை தொடர்ந்து வகிக்கும் அவுஸ்திரேலியா, அரை இறுதிப் போட்டியில் பெரும்பாலும் இந்தியாவை அல்லது மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்தாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]