ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ள சர்வகட்சி மாநாட்டில் யார் கலந்துகொள்ளாவிட்டாலும் தான் அதில் கலந்துகொள்ள போவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி மாநாடு நாளைய தினம் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளளன.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளன. சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 வது படையணி அமைப்பை தனியான அரசியல் கட்சியாக கருதி, அந்த அமைப்புக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பை சேர்ந்த பலர், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வது நல்லது என முடிவு செய்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
43வது படையணி என்ற அமைப்பு ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் உறுப்பு அரசியல் அணி என்ற வகையில் அந்த கட்சியின் கூட்டு முடிவை ஏற்று செயற்பட கடமைப்பட்டுள்ளது என்ற போதிலும் சர்வக் கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது சம்பிக்க ரணவக்கவின் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை ரணில் விக்ரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.
“ எப்படியான பிரச்சினைகள் இருந்தாலும் நாம் அரசியலில் ஈடுபட நாடு இருக்க வேண்டும். தற்போதைய பிரச்சினை நாடு பற்றிய பிரச்சினையே அன்றி அரசியல் பிரச்சினையல்ல. இதனால், யார் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நான் சர்வக் கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வேன்.”என ரணில் விக்ரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]