இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 159.00 ரூபாயாக உள்ளது
இலங்கை பொருளாதார நிலை
இதனால் ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. அதேபோல் இலங்கையில் கடுமையான மின்சார தடையும் ஏற்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் விலை அங்கே ஏறிவிட்டது. இலங்கையில் ஒரு கிலோ சம்பா அரிசி விலை 210 ரூபாய் ஆகும்.
இலங்கை விலைவாசி
அதேபோல் 1 கிலோ துவரம் பருப்பு விலை 380 ரூபாய் ஆகும். கோழி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய். முட்டை ஒன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. கேஸ் சிலிண்டர் வாங்க மக்கள் பல கிலோ மீட்டர் லைனில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த அவலம் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி எனப்படும் Samagi Jana Balawegaya அங்கு போராட்டம் நடத்தி வருகிறது. மக்களும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
அகதிகள் தமிழ்நாடு
இந்த நிலையில்தான் இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தியா இலங்கை இடையே 13 மணல் திட்டு உள்ள பகுதியில் இன்று கடலோர காவல்படையினர் ரோந்து பணிகளை செய்து வந்தனர். அப்போது தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டு பகுதியில் 1 ஆண், 2 பெண்கள், ஒரு கை குழந்தை, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை உடனே கடலோர காவல்படையினர் மீட்டு க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை அகதிகள்
இவர்களிடம் க்யூ பிரிவு போலீசாரிடம் விசாரணை நடத்திய நிலையில் பஞ்சம் காரணமாக இவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. உணவு கிடைக்கவில்லை, குழந்தைகளுக்கு பால் கொடுக்க கூட முடியவில்லை. விலைவாசி அதிகமாகிவிட்டது. வேலையும் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு உதவி
தமிழ்நாட்டிற்கு வந்தால் தப்பித்துக்கொள்ளலாம். இங்கே ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நம்பி வந்தோம் என்று அவர்கள் விசாரணையில் கூறியுள்ளனர். ஆனால் இவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வந்த இவர்களுக்கு முதலில் உணவு கொடுக்கப்பட்டது.
தனுஷ் கோடி
எல்லோருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. கை குழந்தைக்கு பால் தரப்பட்டது. இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருக்கும் மேலும் பலர் தமிழ்நாட்டிற்கு தப்பித்து வர வாய்ப்பு உள்ளதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்து பலர் இங்கே வரலாம் என்றும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் இங்கு ரோந்து பணிகளை கடலோர காவல்படையும், உளவுத்துறையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]